செய்தியாளர் - ரஹ்மான்
புதுச்சேரி உருளையன்பேட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த உத்ரேஷ் (28) என்பவர் தாய் மற்றும் சகோதரியுடன் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்துள்ளார்.
அப்போது கோவில் அருகே ஊர்வலம் வந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தாங்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு, உத்ரேஷை சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த, உத்ரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த, உருளையன்பேட்டை போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட உத்ரேஷ் மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியின் நகரப்பகுதியில் உள்ள கோவில் பால்குட ஊர்வலத்தின் போது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.