சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாகத் திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்வது குறித்து செய்திகள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்பட பலரும் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மேடையில் கலைஞர்கள் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் இளைஞர் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் மண்டலம் மாருதி நகர்ப்பகுதியில் விநாயக மண்டபம் அமைத்து அதில் விநாயகர் சிலை வைத்து கடந்த மூன்று தினங்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர். நேற்று இரவு (செப்.20), இந்த விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடலுக்கு ஒருசில இளைஞர்கள் நடனமாடினர். அப்பகுதி மக்கள் அவர்களை, கைகளை தட்டி உற்சாகப்படுத்தி வந்தனர். இதில் 26 வயதான பிரசாத் என்ற இளைஞர் நடனம் ஆடிக்கொண்டே சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரசாத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கேனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்ததால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள், ‘நம் உடலில் சேரும் கொழுப்புகள் இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. மக்கள் அடிக்கடி வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்’ என எச்சரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு, பிரபல பாடகர் கே.கே. மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக பாடுவதை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு திரும்பியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல், கேரளாவைச் சேர்ந்த மூத்த பாடகர் எடவா பஷீர் ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். அதுபோல், ஜம்முவில் யோகேஷ் குப்தா என்ற இளைஞர், மேடையில் நடனமாடியபோது தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஜனவரி 2ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர், மஸ்கட்டில் தன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.
அடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி ஹைதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், பிப்ரவரி 26ஆம் தேதி, தெலுங்கானாவில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவரும், பிப்ரவரி 28ஆம் தேதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வீரர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், கடந்த மார்ச் மாதம் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடித்த ஒருவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த மே 5ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் ஒருவர் தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்று நடனமாடியபோது, திடீரென சரிந்துவிழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.