ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெல்லகுந்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில், 5டி திட்டத்தின் தலைவரான வி.கே.பாண்டியன் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் மேடைக்கு சென்றுகொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென அவர் மீது தக்காளி ஒன்றை வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே தக்காளி வீசியவரை பிடித்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் அடித்து உதைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அந்த நபரை போலீஸார் கட்சியினரிடமிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளானவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், பிஜூ ஜனதா தளம் கட்சி மற்றும் 5டி திட்டத்தின் தலைவரான வி.கே பாண்டியன் ஆகியோர் மீது பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அதிருப்தியில் இருந்ததால், தக்காளியை வீசியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிகழ்வுக்குப் பின் வழக்கம்போல், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய வி.கே.பாண்டியன், ”என் மீது முட்டை, தக்காளி மற்றும் மை வீசினாலும் ஒடிசா மக்களுக்கு நான் சேவையாற்றுவேன்” என கூறினார். இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது, அவர்மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன். 2000ஆம் ஆண்டு குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற இவர், ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 2007-2011 காலக்கட்டத்தில் கஞ்சம் மாவட்ட ஆட்சியராக வி.கே.பாண்டியன் பணியாற்றிய காலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து அவரின் தனிச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு அவர் ஐஏஎஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து 5டி திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். குழுவாக பணியாற்றுதல், வெளிப்படை தன்மை, தொழில் நுட்பம் உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த 5டி தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் அதிகாரப்பூர்வமாக பிஜூ ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருடைய மனைவி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.