கேரளாவில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் போராட்டம் நடத்திய இடத்தை காங்கிரஸ் கட்சியினர் சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி, தனது தொகுதிக்கு உட்பட்ட திரிப்ரையார் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், சாலையை சரிசெய்யக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். சாலை சரிசெய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எம்எல்ஏ கீதா கோபி போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்ததாக தெரிகிறது.
தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் சாணம் ஊற்றி சுத்தம் செய்ததாக கீதா கோபி குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியினர், தொகுதி மக்கள் மீது எம்எல்ஏ கீதா கோபிக்கு அக்கறை இல்லை என்றும், அதனை கண்டிக்கும் விதமாகவே இச்செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.