நட்பில் தொடங்கி, காதலில் விழுந்து, ஒன்றாக இணைந்து வாழ்ந்த இரு இளம்பெண்களின் கதை கொலையில் முடிந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் மஞ்சிராலா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
மஞ்சிராலா மாவட்டம் மமிதிகட்டு பகுதியைச் சேர்ந்தவர் நல்லாரி அஞ்சலி. இவர் நென்னேலா மண்டலத்துக்குட்பட்ட மன்னேகுடத்திலுள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்படி சென்றபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த குர்த் மகேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரின் நட்பும் காதலாகவும் மாறிவிட்டது. இதனையடுத்து இருவரும் ரூம் எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர். அஞ்சலி ஒரு கண் கண்ணாடி கடையில் வேலை செய்து வந்துள்ளார். பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்துவந்த மகேஸ்வரி சமீபத்தில் வேலையை விட்டிருக்கிறார்.
இந்நிலையில் மஞ்சார்யா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவாஸ் என்பவரை சந்தித்திருக்கிரார் மகேஸ்வரி. ஆனால் இரண்டு மாதங்களில் ஸ்ரீவாஸுடன் நெருங்கிப் பழகிய அஞ்சலி, மகேஸ்வரியை விலக்கி வைத்திருக்கிறார். புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு அறைக்குச் சென்ற அஞ்சலியை, இரவு 10 மணியளவில் நாம் மமடிகட்டிற்கு போகலாம் வா என்று அழைத்திருக்கிறார் மகேஸ்வரி. இரவு 11.30-க்கு ஸ்ரீவாஸுக்கு போன் செய்த மகேஸ்வரி, அஞ்சலி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக சம்பவம் நடந்த குடிபள்ளி பகுதிக்கு தனது காரில் சென்றிருக்கிறார் ஸ்ரீனிவாஸ். அங்கு கழுத்து அறுபட்டு சுயநினைவின்றி கிடந்த அஞ்லியையும், அருகில் சிறு காயங்களுடன் இருந்த மகேஸ்வரியையும், மஞ்சிராலா மருத்துவமனைக்கு தனது காரிலேயே அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் முன்பே அஞ்சலி இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். மகேஸ்வரியின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் சிறு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக அஞ்சலியின் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து மகேஸ்வரிதான் அஞ்சலியைக் கொலைசெய்தாரா? அல்லது வேறு யாரேனும் கொன்றார்களா? ஸ்ரீனிவாஸ் என்ற நபர்தான் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அந்த நபருக்கும் கொலைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அஞ்சலியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய வரன்பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் புதன்கிழமை இரவு இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக சண்டையிட்டார்களா? என்பது போன்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருமண வரன் தொடர்பாக புதன்கிழமை இரவு அஞ்சலி தனது ஊருக்குச் செல்ல புறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மகேஸ்வரி அவரை பின் தொடர்ந்துவந்திருக்கலாம் எனவும், இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் மாறி மாறி தாக்கிக்கொன்டார்களா? எனவும் சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல்வேறு கேள்விகள் மற்றும் மர்மங்கள் மறைந்துள்ளதாக கருதப்படும் இந்த கொலை விவகாரத்தில் சந்தேகத்தின்பேரில், ஸ்ரீனிவாஸை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஞ்சலியின் பெற்றோர் தனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ள நிலையில் தீவிர விசாரணைக்கு பின்னர் இந்த கொலையில் பல மர்ம முடிச்சுகள் அவிழலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.