மத்திய பிரதேசத்தில் திருமண புரோபசலை நிராகரித்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் கவலைக்கிடமாக உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்திலுள்ள இந்திரா சாகர் டேம் கிராமத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர் பக்கத்து கிராமத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது கிராமத்திலுள்ள 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அணுகியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பப்லு திங்கட்கிழமை அந்த பெண் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் பலமுறை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோதும் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரி விவேக் சிங் கூறியுள்ளார்.
இதனுடையே போலீசார் பப்லுவை தேடிச்சென்றபோது அவர் இந்திரா சாகர் டேம் பகுதியில் பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது என்றும் விவேக் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், ‘’எங்களுடைய பெற்றோர் அருகிலுள்ள எங்கள் அத்தை கிராமத்திற்கு சென்றுவிட்டனர். வீட்டில் நானும் எனது தங்கையும் மட்டும் தனியாக இருந்தோம். நாங்கள் இருவரும் வாளியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தோம். நான் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில் அங்கு வந்த பப்லு எனது சகோதரியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். பப்லு எனது தங்கையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால் எனது தங்கை அதை ஏற்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்டில் காதலை நிராகரித்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் தீவைத்து கொளுத்திய ஒரே வாரத்தில் அதேபோன்றதொரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.