தனது லிவ் - இன் பார்ட்னர் தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் சிங்(27). இவர் உத்னாவின் படேல் நகரிலுள்ள தனது வீட்டில் ஜூன் 27ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது இறப்பிற்கு காரணம், அவரது லிவ் -இன் பார்ட்னர் சோனம் அலியும், அவரது சகோதரர் முக்தார் அலியும் சித்ரவதை செய்ததுதான் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிலும் குறிப்பாக இருவரும் தன்னை மாட்டிறைச்சி சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியதே தன்னை தற்கொலை முடிவெடுக்க தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகுலின் தாயார் வீணாதேவி போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், தனது மகன் துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஆரம்பகட்டமாக விபத்து மரண வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி தற்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’’சோனம் உடன் சென்றபிறகு ராகுல் தனது குடும்பத்தாருடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார். சோனமும் ராகுலும் திருமணம் செய்துகொண்டனரா இல்லையா என்பது குறித்து அவருடைய தாயாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இந்நிலையில் ராகுலின் தற்கொலை குறிப்பு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியதையடுத்தே வீணாதேவிக்கு தனது மகனின் மரணம் குறித்து தெரியவந்திருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்ட நாளில் தனது தற்கொலை குறிப்பை பதிவிட்டுள்ளார். அந்த தற்கொலை குறிப்பில் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த சித்ரவதை தாங்காமல் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை தெளிவாக விளக்கவில்லை.
அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில் சில மாதங்களுக்கு முன்பு ராகுல் தனது சகோதரி மற்றும் தாயாருடன் இந்த நகரத்திற்கு வேலைக்காக வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பணியிடத்தில் சோனமை சந்தித்து நட்பை வளர்த்திருக்கிறார். அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பமுடன் இருப்பதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தபோது அவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதன்பிறகு இருவரும் லிவ்-இன் உறவில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஏனெனில் அவர்களுடைய திருமணம் குறித்த எந்த ஆவணங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை ’’ என்று கூறியுள்ளார்.