கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் வசிப்பவர் திவ்யஸ்ரீ, இவரும் குந்துாரு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்பவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு, காதலாக மாறியது. ஐந்து ஆண்டுகளாக காதலிக்கும் இவர்கள், ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, திவ்யஸ்ரீ கேட்ட போது மூன்று மாதத்துக்கு பின் திருமணம் செய்து கொள்வதாக, மகேஷ் வாக்களித்துள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். இதனால் திவ்யஸ்ரீ, தன் பெற்றோரிடம் நடந்ததை கூறிய நிலையில், இருவரின் பெற்றோர் பேசிமுடித்து சிலகவாடி கோவிலில் திருமணம் நிச்சயித்தனர்.
கடந்த நவம்பர் 27ல் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முந்தைய நாளே மகேஷ் வீட்டை விட்டு ஓடியதால் திருமணம் நின்றது. மொபைல் போனையும் மகேஷ் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இது தொடர்பாக, மாம்பள்ளி காவல் நிலையத்தில், திவ்யஸ்ரீ புகார் அளித்தார்.
இத்தனை நாட்களாகியும் வீட்டைவிட்டு வெளியேறியவர் திரும்பி வராததால் பொறுமையிழந்த திவ்யஸ்ரீ, குந்துார் கிராமத்துக்கு சென்று காதலன் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், மகேஷை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக உறுதியளித்து, திவ்யஸ்ரீயை அனுப்பி வைத்தனர்.