கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தாயின் உயிரை காப்பாற்றியதற்காக, தாய்க்கு சிகிச்சையளித்த அதே அரசு மருத்துவமனையில் இலவச சேவை புரிகிறார் இளம் மருத்துவரொருவர். இவரின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது.
தற்போதைய உலகை இயக்கும் இயங்கு சக்தி, தன்னலமற்ற சேவைகள் தான். கொரோனா என்னும் கொடிய அரக்கனை எதிர்த்து போராடும் இன்றைய உலகத்துக்கு உறுதுணையாக பலர் சேவைகள் செய்துவருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில் தன்னுடைய சேவையால் பலரின் மனங்களை நெகிழவைத்து வருகிறார் கர்நாடகாவை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர். அவர் பெயர் மருத்துவர் ஹர்ஷா.
கர்நாடகாவின் நெற்களஞ்சியமான மாண்டியா அருகே உள்ள மத்தூர்தான் இவரின் சொந்த ஊர். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற பிஜிஐஎம்ஆரில் கதிரியக்க நோயறிதல் படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்து சத்தீஸ்கர் மருத்துவமனையில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே, 15 நாட்களுக்கு முன்புஇவரின் தாய் ராஜலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ராஜலட்சுமி மாண்டியாவில் இருப்பதால் மருத்துவமனையில் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மாண்டியா விரைந்தார் ஹர்ஷா. அப்போது கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட அவரின் தாய் ராஜலட்சுமிக்கு ஐசியூ வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு இருந்த தொடர்புகள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிபெற முயற்சித்துள்ளார் ஹர்ஷா.
ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. தாய் ராஜலட்சுமியின் நிலையை சோதித்து பார்த்தவர்கள், அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளார் என்றுக் கூறி கைவிரித்துள்ளனர். ஒரு மருத்துவராக இருந்துகொண்டு தனது தாய்க்கே சிகிச்சை அளிக்க முடியாத விரக்தியில் இருந்து மருத்துவர் ஹர்ஷா, இறுதியாக மாவட்ட அரசு மருத்துவமனை மூத்த மருத்துவர் ராஜேஸ்வரியை தொடர்புகொண்டு விஷயத்தை பகிர்ந்துகொள்ள, இறுதியில் அரசு மருத்துவமனையில் தாய் ராஜலட்சுமியை சேர்த்துள்ளார்.
அங்கு 10 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்துள்ளார் அவர். ஒவ்வொரு நாளும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் அளவு மேம்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த ராஜலட்சுமியின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையிலிருந்த அவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்கள் அந்த அரசு மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்கள். அவர்களின் பணிக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த 10 நாட்களும் மருத்துவர்களுடன் இணைந்து மருத்துவ பணியை இலவசமாக பார்த்து வருகிறார் மருத்துவர் ஹர்ஷா.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த மருத்துவமனையில் சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஆனால் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. மேலும் ஊழியர்களை வேலைக்கு எடுக்க நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தும் கொரோனா மருத்துவமனையில் பணிபுரிய யாரும் முன்வரவில்லை. இதனால் அங்கிருக்கும் மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த தகவலை கேள்விப்பட்ட மருத்துவர் ஹர்ஷா, தன் தாயை காப்பாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தான் வேலை பார்க்கும் சத்தீஸ்கர் மருத்துவமனையில் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கு பணியாற்றி வருகிறார்.
இது குறித்து பேசிய மருத்துவர் ஹர்ஷா, "இந்த அரசு மருத்துவமனையில் நல்ல அடிப்படை கட்டமைப்புகள் இருக்கின்றன. ஆனால் சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதார பணியாளர்கள் வேலைப்பளுவை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நான் இங்கே இருக்கிறேன். தற்போது நான் சத்தீஸ்கர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். அங்கும் எனது பங்களிப்பு தேவைப்படுகிறது. எனினும் எனது நன்றியை செலுத்த அங்கு விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே தன்னார்வலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது நன்றிக்கடனை செலுத்த இலவசமாக பணியாற்றி வரும் மருத்துவர் ஹர்ஷாவின் செயல் பலரை நெகிழவைத்து வருகிறது.