பெங்களூருவில் 5 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து 38 வயது நபரை அவரது வீட்டிற்கு வெளியே வைத்து தலையில் கல்லால் அடித்து கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
உத்தரஹள்ளி அருகேயுள்ள ரவுகோத்லு பகுதியில் வசித்து வந்தவர் சந்தரமௌலி என்கிற சந்துரு எஸ்(38). இவரது தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது மகன் சந்துருவை மணி, லோகேஷ், விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கொலைசெய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரில், ‘’கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுடைய குக்கிராமத்தில் ஏற்பட்ட அற்பமான ஒரு சண்டையில் சந்துரு, மணி என்ற சிறுவனின் நாக்கை வெட்டிவிட்டார். அந்த முன்விரோதம் காரணமாக சிறுவன் மணி தனது கூட்டாளிகளான அஞ்சனி ஜி, மகேஷ் மற்றும் தீபு என்கிற தீபக் ஆகிய சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு சந்துருவை பழிதீர்க்கும் விதமாக தாக்கிவிட்டான்.
எனது மகன் வேலை எதுவும் செய்யவில்லை; திருமணமுமாகவில்லை. மணியின் நாக்கை வெட்டிய குற்றத்திற்காக சந்துரு காவலில் வைக்கப்பட்டார். மணியின் நிலைமை குறித்து மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சந்துருவுக்கு நீதிமன்றம் ஜாமீன்கூட வழங்க மறுத்துவிட்டது. வெட்டப்பட்ட நாக்கின் புகைப்படம் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சந்துருவுக்கு ஜாமீன் கிடைத்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், மணி மற்றும் அவருடைய கூட்டாளிகள் சந்துருவின் வீட்டிற்கே சென்று கதவை உடைத்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளனர். பின்னர் அந்த குழு சந்துருவை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். அப்போது மணி அங்கிருந்த கல்லை எடுத்து சந்துருவின் தலையில் அடித்ததுடன், அவரது தலையை பிடித்து சுவரில் அடித்து கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
புகாரின்பேரில் ககாலிபுரா காவல்நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டு பின்னர் குற்றவாளிகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். மணியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு சந்துரு, மணியின் ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு வாங்கிச் சென்றுள்ளார். அதில் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்படவே மணியை மொட்டைமாடிக்கு வரவைத்த சந்துரு, அங்கு அவரது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மணியை அடித்து நாக்கை வெட்டியுள்ளனர். அதேபோல தானும் பழிவாங்க நினைத்தே சந்துருவை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் மணி. இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.