உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு முட்டாள் போல செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கூறி கடந்த 2 இரண்டு நாட்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு முட்டாள் போல செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, “ என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிடுபவர்களை கைது செய்து சிறையில் வைப்பதாக இருந்தால் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டு விடும். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு முட்டாள் போல செயல்படுகிறார். கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பத்திரிகையாளர் கைது சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கன்னூஜின் மனைவி இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து பத்திரிகையாளர் முகநூலில் பதிவிட்டது என்ன கொலை குற்றமா? எந்த அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவதூறு வழக்கிற்காக 11 நாட்கள் காவலில் வைப்பீர்களா என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது, எதற்கு எடுத்தாலும் கைது செய்வீர்களா என்றும் வினவினர். மேலும் கைது செய்யப்பட்ட கன்னூஜை ஜாமீனில் விட உத்தரவிட்டனர்