உத்தரப் பிரதேசத்தில் நாளை பிரம்மாண்டமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா நடைபெற நிலையில், அதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் லக்னோவில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சட்டமன்ற குழுத்தலைவராக மீண்டும் தேர்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் நாளை மாலை 4.30 மணி அளவில் பதவி ஏற்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் `அடல் பிகாரி வாஜ்பாய்’ மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் பிரம்மாண்ட புகைப்படங்கள் இடம்பெற்ற கட் அவுட்டுகள், பேனர்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சாலை நெடுகிலும் பாரதிய ஜனதா கட்சியின் கட்சிக் கொடிகள் மற்றும் தோரணங்கள் உள்ளிட்டவைகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இந்த விழாவில் பா.ஜ.க.கூட்டணி ஆளும் முதல்வரான நிதீஷ்குமார் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல பா.ஜ.க மாநில தலைவர்கள் முன்னாள் முதல்வர்கள் பலரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அமைச்சரவையில் பல்வேறு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு மூலம் மக்களின் செல்வாக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க.க்கு கிடைத்து இருப்பதையும் இதை வருகிற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் இம்முறை பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், வாக்கு சதவீதம் என்பது அதிகரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாகத்தான் மக்கள் இம்முறை பா.ஜ.க.வுக்கு மீண்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
- விக்னேஷ்முத்து