திவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு
உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் லக்னோ ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ மாவட்டத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில், விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. அண்மையில் கோம்டி நகர் அருகே விவேக் காரில் சென்றுள்ளார். வாகன சோதனை செய்வதற்காக காவல்துறையினர் காரை நிறுத்த அறிவுறுத்தினர். அப்போது, விவேக் காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது விவேக் திவாரியை நோக்கி காவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் விவேக் திவாரியின் குடும்பத்திற்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் லக்னோ ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விவேக் திவாரி உயிரிழப்பு குறித்து 30 நாட்களில் விசாரிக்க சிறப்பு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக திவாரியின் மனைவி, தன்னுடைய கணவரை சுட்டுக் கொல்ல போலீஸுக்கு உரிமை இல்லை என தெரிவித்ததோடு உத்தரப்பிரதேச முதலமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.இந்த சம்பவத்தால் யோகி ஆதித்யநாத் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. இதனையடுத்து சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரியின் குடும்பத்தினரை யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.