உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் செய்தி மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டதாகவும், அதில் 10 நாட்களுக்குள் ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பத்து நாட்களுக்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் இல்லையென்றால், கடந்த மாதம் பாந்த்ராவில் சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக்கின் நிலைதான் அவருக்கும் ஏற்படும் என்று, மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவிற்கு தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக மும்பை போலிசார் தெரிவித்துள்ளனர்,
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக யோகி ஆதித்யநாத் மும்பை வர வாய்ப்புள்ளதால், அவரின் பாதுகாப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் .
வாட்ஸப் மூலம் போலிசாருக்கு இந்தச் செய்தியை அனுப்பியவரை மும்பை போலிசார் தேடி வருகிறது.
பாபா சித்திக் படுகொலை
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12ம் தேதி மாலை மூன்று மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலிவுட் நடிகர் சல்மான்கான்
முன்னதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகரின் வீட்டிற்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நடிகர் சல்மான்கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.