வட இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் இதே நேரத்தில், கொரோனா தடுப்பு மட்டுமன்றி பசுக்களின் நலன் மீது கவனம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்கள் உதவி மையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி அமைக்கப்படும் பசுக்களுக்கான முகாம்கள் அனைத்திலும், கொரோனாவுக்கான தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இம்முகாம்களுக்கு வரும் அனைத்து விலங்குகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் வசதியும், ஆக்சிஜன் பரிசோதிக்கும் ஆக்ஸோமீட்டர் வசதியும் செய்துவைக்கப்படவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகாம்களில் பசுக்கள் தங்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆதரவற்ற பசுக்கள் இங்கே அதிகம் தங்கவைக்கப்படுகின்றன என சொல்லப்படுகிறது. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற கணக்கில், அதிக கொட்டகைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அரசு தரப்பு தரவுகளின்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 5,268 பசு பாதுகாப்பு மையங்கள் உள்ளன. அவற்றில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன.