ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் 53 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அனைத்து வகை சோலர் குக்கர்கள், அனைத்து வகை பால் கேன்கள், அட்டை பெட்டிகள், நீர் தெளிப்பான் உள்பட அனைத்து வகை தெளிப்பான்களுக்கும், ஒரே சீராக 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நடைமேடை சீட்டு, ரயில் நிலைய பயணிகள் ஓய்வறை, பொருட்கள் வைப்பறை என ரயில்வே வழங்கும் அனைத்து சேவைகளுக்கும், ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வெளியே செயல்படும் மாணவர்கள் தங்கும் விடுதிக்கு, ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நபருக்கு மாதம் 20 ஆயிரம் வரையிலான வாடகைக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும், ஜிஎஸ்டிஆர் 4 படிவம் மூலம் ரிட்டன் தாக்கல் செய்வதற்காக கால வரம்பு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கு, ஆதாரை கொண்ட பயோமெட்ரிக் நடைமுறையை கட்டாயமாக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அதேபோல், உரங்கள் மீதான ஜிஎஸ்டி குறித்து மறுபரீசிலனை செய்ய அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.