பாரதிய ஜனதா அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஆட்சி கவிழும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு ரீதியாக கர்நாடகாவில் அரசு அமையவில்லை என்றும் குதிரை பேரத்துக்கு கிடைத்த வெற்றியால் கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மரபுகளை மீறி ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவித்த அவர் பெரும்பான்மையே இல்லாத நிலையில் எடியூரப்பா ஆட்சி அமைத்துள்ளார் என தெரிவித்தார்.
இது குறித்து சித்தராமையா தெரிவித்துள்ள விளக்கத்தில், மூன்று எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் 221 உறுப்பினர்கள் இருக்கும் போது பெரும்பான்மைக்கு 111 பேரின் ஆதரவு கர்நாடக அரசுக்கு இருக்க வேண்டும். ஆனால் தற்போது 105 எம்எல்ஏக்களே பாஜக வசம் இருப்பதால் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்தார். மும்பையில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் என்பதால் அவர்கள் ஆதரவு அளிக்க முடியாது என சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். நான்கு நாட்களில் பாஜக அரசு கவிழும் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.