கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.
ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பில், நள்ளிரவு 2 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இறுதியாக, கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்பதற்கு நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையின் கண்ணாடி மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தில் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா தற்போது பதவியேற்றுள்ளார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.