காங்கிரஸ் கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என நடிகை நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 10 வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், தமிழ்நாடு, ஹரியானா, கா்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா்.
இந்த நிலையில் தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''2003-04 ஆண்டில் நான் காங்கிரசில் இணைந்தபோது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி எனக்கு உறுதியளித்தார். நாம் அப்போது ஆட்சியில் இல்லை. அப்போதில் இருந்து 18 ஆண்டுகள் ஆகியும் மாநிலங்களவையில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக இம்ரானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேராவும் தனக்கு மாநிலங்களவை எம்பி வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டிருந்த மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்திலிருந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: இன்று பாஜகவில் இணைகிறாரா ஹர்திக் படேல்? - குஜராத் அரசியலில் பரபரப்பு