குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்கையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த அரசியல்வாதி யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். திரௌபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவை கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சென்று மாநிலங்களவை செயலாளரிடம் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி கட்சிகள் சார்பில் டி.ராஜா மற்றும் சீதாராம் யெச்சூரி, டி.ஆர்.எஸ். தரப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தரப்பில் அபிஷேக் பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ஜம்மு-கஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சிவசேனா, வி.சி.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், சிவசேனா உள்ளிட்ட 12 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் யஷ்வந்த் சின்கா தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவை கோர இருக்கிறார்.
- செய்தியாளர்: விக்னேஷ் முத்து