அமர்ந்தபடியே அதிக நேரம் அலுவலக பணிபுரிபவர்கள் மற்றும் அதிக வேலைப்பளுவில் இருப்பவர்கள் தங்களுடைய நேரத்தை சேமிக்கும் பொருட்டு தங்களின் உணவுகளை பெரும்பாலும் Zomato, Swiggy போன்ற செயலிகள் மூலமாக ஆர்டர் செய்வதுண்டு. இதில் பெரும்பாலானோர் உணவின் விலைப் பட்டியலைப்பற்றி கண்டு கொள்வதில்லை. செயலியில் வரும் விலையே சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை அதன் முக்கிய காரணமாக உள்ளது.
அதேநேரம், செயலிகளை விட அந்த உணவகத்தில் உள்ள மெனுவில் இந்த உணவின் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ‘நேரில் வந்து தருகிறார்கள்... பேகேஜ் செலவு இருக்கும்... டெலிவரி செலவும் இருக்கும்...’ என்று நினைத்து அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
அப்படித்தான் Zomato வாடிக்கையாளர் அபிஷேக் கோத்தாரி என்பவரும் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதில் உப்மாவின் விலை ரூ 120 என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட கடைக்கே சென்று மெனுவிலுள்ள உப்மா விலையை பார்த்துள்ளார். அப்படி ஒப்பிடும்போது Zomato-வில் உள்ள உணவின் விலை, நேரில் வாங்குவதைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து இருந்துள்ளது. இதை உடனடியாக தன் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் அவர்.
தனது X வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இரு விலைகளையும் ஒப்பிட்டுள்ளார். இதில் ஹோட்டலில் 40 ரூபாய்க்கு விற்கப்படும் அதே உப்மா Zomato-வில் 120 ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல தட்டு இட்லியானது ஹோட்டலில் 60 ரூபாய், Zomato வில் 160 ரூபாய் என்றுள்ளது.
இதை பார்த்தத பலரும், ‘இது என்ன பகல் கொள்ளையா இருக்கு... இது டெலிவரி சார்ஜ் சேர்க்காமல் வரும் தொகை... அதாவது ஹோட்டல் நிர்ணயித்த தொகையே, 3 மடங்கு அதிகம் உள்ளது. இதுபோக செயலி நிறுவனம் டெலிவரி தொகை சேர்க்கும். அப்படி சேர்த்தால் இன்னும் பல மடங்காக இந்த விலை உயரும்’ என வேதனை தெரிவித்து வருகின்றனர்.!
இந்தப் பதிவு வைரலானதை அடுத்து, Zomato நிறுவனம் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, அந்நிறுவனமும் அபிஷேக்கிற்கு பதில் அளித்துள்ளது. அதில், “வணக்கம் அபிஷேக், எங்கள் செயலியில் உள்ள விலைகள், சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலமாக மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், உங்களின் புகார் மற்றும் கருத்துக்களை அவர்களுடன் பகிர்கிறோம்” என்றுள்ளது Zomato. அதாவது, தங்களுக்கும் விலை ஏற்றத்துக்கும் தொடர்பில்லை என்றது அந்நிறுவனம்.
இதற்கு அபிஷேக், “உணவகத்தில் பில்லிங் டேபிளில் இருந்த பையனிடம் விலையில் உள்ள இந்த வித்தியாசம் பற்றி நான் கேட்டேன். அவர் ‘நாங்கள் தரும் மெனுவின் விலையின்படிதான் Zomato எங்களுக்கு ஷேர் செய்து தொகையை வழங்குகிறது. அதனால்தான் அப்படி கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்” என ரிப்ளை செய்துள்ளார். இதையடுத்து, யார் இங்கு குற்றவாளி என சமூகவலைதளத்தில் விவாதம் எழுந்துள்ளது.
எது எப்படியோ... பாதிக்கப்படுவதென்னவோ வாடிக்கையாளர்கள்தான்!