மும்பையின் தெற்குப்பகுதியான கொலாபாவில் ஒரு நகைக்கடைக்குச் சென்ற மராத்தி எழுத்தாளர் ஷோபா தேஸ்பாண்டே. நகைக்கடை அதிபரை மராத்தியில் பேசுமாறு ஷோபா வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், ஷோபாவின் 20 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு நகைக்கடை உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். மராத்தியில் பேச மறுத்ததுடன் கடையை விட்டு வெளியே போகுமாறும் கூறியதால் ஷோபா கோபமடைந்துள்ளார். உடனே நகைக்கடை வாசலிலேயே அவர் அறப்போராட்டம் செய்யத் தொடங்கினார்.
கடையை நடத்துவதற்கான லைசென்ஸை காட்டுமாறு அந்த உரிமையாளரிடம் எழுத்தாளர் கேட்டுள்ளார். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். பலமணி நேரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் ஷோபாவை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
"மகாராஷ்டிராவின் முக்கிய நகரத்தில் நகைக்கடை இருக்கிறது. அவருக்கு மராத்தி தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார். மராத்தியில் பேசினேன். நான் இந்தியில் பேசாததால் காதணிகளை விற்க மறுத்துவிட்டார். மேலும் கடையை விட்டு வேளியேறுமாறும் வெறுப்புடன் துரத்தினார்" என்று குற்றம்சாட்டுகிறார் எழுத்தாளர் ஷோபா தேஸ்பாண்டே.
ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியினரும் ஷோபா தேஸ்பாண்டேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மராத்தி கற்கும்வரையில் கடையைத் திறக்கக்கூடாது எனவும் நகைக்கடை உரிமையாளரை எச்சரித்தனர்.