இமாச்சலில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் 51 வருடத்துக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-12 BL-534 என்ற விமானம், சண்டிகரில் இருந்து லே- பகுதிக்கு பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் 98 வீரர்களும், 6 பணியாளர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்க இருக்கும் நிலையில் மோசமான வானிலை நிலவுவதால், புறப்பட்ட இடத்துக்கே திருப்புமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. சண்டிகருக்கு விமானம் திரும்பியபோது இமாச்சலில் உள்ள ரோதங் கணவாய் அருகே திடீரென மாயமானது. அப்போது இந்த விமானத்தை தேடும் பணிகள் நடந்தன. பனிமலை முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் தேடும் பணி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் சிலவும் சில வீரர்களின் உடல்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியை, தோக்ரா ரெஜிமண்ட் படையினர் நடத்தி வந்தனர். இந்த தேடுதலில் இமாச்சலில் உள்ள லாஹால் - ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள தாகா சிகரத்தின் அருகே, இந்திய விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பனிப்பறைகளுக்குள் கிடந்த விமானத்தின் எரிபொருள் டேங்க், காக்பிட் கதவு, விமான என்ஜின், றெக்கை, விமானத்தின் உடல் பகுதி, மின்சார இணைப்புகள் உட்பட பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அருகில் சில வீரர்களின் உடல்கள் கிடைத் துள்ளன. இது 1968 ஆம் ஆண்டு மாயமான விமானத்தின் பாகங்கள்தான் என தெரிவித்துள்ளனர்.