ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்திய ஒற்றை காட்டு யானையை அம்மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து அந்தக் காட்டு யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று கொரி, தானாகாதி, சுகிந்தா பகுதிகளில் சுற்றி வந்தது. இந்தக் காட்டு யானை அருகில் இருக்கும் காடுகளில் இருந்து நகருக்குள் வந்தது. வனத்துறையினர் பல முறை இந்த யானையை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் நகருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. சுமார் 10 வயதுடைய அந்தக் காட்டு யானை அண்மையில் கொரி பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து இந்தப் பகுதி மக்கள் காட்டு யானையை வனத்துறையினரின் உதவியுடன் விரட்டினர்.
அப்போது அந்த யானை இரண்டு முதியோர்களை மிதித்துக் கொன்றது. இதனால் அச்சமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஆனாலும் அந்த யானை அதே பகுதிகளில் சுற்றி வந்தது. அந்த யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர். ஒடிசாவில் யானை மனிதன் மோதல் வழக்கமானது என்றாலும் இம்முறை இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காட்டு யானைக்கு பயந்து, கடந்த வாரத்தில் சுமார் 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
ஒடிசா வரலாற்றில் முதல் முறையாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், யானைக்கு பயந்தும் ஒரே நாளில் இத்தனை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது முதல் முறை. மொத்தமாக அந்த யானை இதுவரை 4 பேரை கொன்றதால் யானையை பிடிக்கக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வனத்துறையினரின் கடும் முயற்சிக்கு பின்பு கடந்த திங்கள்கிழமை ஒற்றைக் காட்டு யானையை மயக்கு ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து அந்தக் காட்டு யானையை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.