உலகின் மிக உயரமான டாக்டர் அம்பேத்கர் சிலை ஜனவரி 19 அன்று விஜயவாடாவில் திறக்கப்படுகிறது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மாலை 4 மணிக்கு சிலையை திறந்துவைக்க உள்ளார். இதன்பின் 6 மணியளவில் பொதுமக்களிடம் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த சிலை திறப்புவிழாவில் அனைத்து அமைச்சர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரையில் இருந்து 206 அடி உயரம் கொண்டதாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 81 அடி மேடையில் 125 அடி உயரம் கொண்டதாக சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு சமூக நீதியின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான 50 சிலைகளில் ஒன்றாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விழா ஒன்றில் பேசிய அக்கட்சியின் எம்.பி. விஜயசாய் ரெட்டி, “ பட்டியலினத்தவர்கள், நலிந்த பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அம்பேத்கரின் சிந்தனைகளை முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி செயல்படுத்தி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயவாடாவின் மையப்பகுதியில் சிலையை நிறுவியதற்காக ஜெகன்மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் நாகர்ஜூனா, பட்டியலினத்தவர்கள் ஐகானின் கொள்கைகளை பின்பற்றி வரும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பட்டியலின மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்ததாவது, அம்பேத்கரின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை தயாரிக்க 400 டன் இரும்புகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வரலாற்று தருணத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
சிலை திறப்புவிழாவினை முன்னிட்டு வாகனங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலை 11 மணி முதல் இரவு 10 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.