சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற முதல் ரோபோவான சோஃபியா டெல்லியில் நடைபெற்ற மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியலாளர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றது. இதில், கலந்து கொண்டவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சோஃபியா ரோபோ, பதிலளித்தது. மாநாட்டில் பங்கேற்ற நபர் ஒருவரையும் ஓவியமாக வரைந்து பலரையும் ஆச்சரியத்துக்கு உள்படுத்தியது.
ஹாங்க் காங்கை சேர்ந்த நிறுவனம் சோபியா ரோபோவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. அந்த சமயத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட இந்த ரோபோ , உனக்கு ஆபத்து வந்தால் மனிதர்களை அழிப்பாயா? என நிருபர் கேட்ட கேள்விக்கு ஆமாம் மனிதர்களை அழிப்பேன் என கோபமாக பதில் கூறியது. இதனையடுத்து சோஃபியாவை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழத்தொடங்கின.
ஆனால் இதனை உருவாக்கிய நிறுவனம் பல மாற்றங்களை செய்து மீண்டும் சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. அந்த விழாவில் சோஃபியா ரோபோவே தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு , அங்குள்ளவர்களின் கேள்விக்கு நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் பதிலளித்தது. மனிதர்களை அழிப்பேன் எனக்கூறினாயா என்றக்கேள்விக்கு சற்று அமைதி காத்து சாமர்தியமாக இம்முறை பதிலளித்தது சோஃபியா.
சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய நிறுவனம் இதனை தன்னகப்படுத்தி, இதற்கு குடியுரிமை வழங்கியுள்ளது. முதல் குடியுரிமை கொண்ட ரோபோ என்ற பெயர் சோஃபியாவிற்கு கிடைத்துள்ளது.