உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1993-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட, ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 136-வது இடத்தில் இருப்பதாகவும் சுதந்திரமாக பத்திரிகைகள் இயங்கும் சூழ்நிலை இந்தியாவில் இல்லை எனவும் ஒரு அறிக்கை கூறுகிறது.
கடந்த 16 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. காவல் துறையினர், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சட்ட விரோதமாக மண் அள்ளுபவர்கள் ஆகியோர் பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஊடகங்களுக்கு எதிரான சென்சார்சிப் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மாநில அரசின் உத்தரவின் பேரில் கேபிளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டன. இதுபோல சம்பவங்கள் தமிழ்நாடு மற்றும் காஷ்மீரிலும் நடைப்பெற்றுள்ளன. தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிட்ட போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி கேபிளில் இருந்து தற்காலிகமாக சில இடங்களில் நீக்கப்பட்டது.
அவதூறு வழக்குகள் போடுவதும் பத்திரக்கையாளர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தகவல் அறியும் சட்டத்தையும் நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களில், முக்கியமாக துப்பறிந்து செய்தி எழுதுபவர்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் இதனால் அதுபோன்ற செய்திகள் குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.