உலகம் முழுவதும் செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி பிரதமர் மோடி நரேந்திர மோடி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஃபிளாரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களது அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணம் என்றும், சவாலான சூழ்நிலையிலும் சிறப்பான பணியில் ஈடுபடும் செவிலியர்களை மீண்டும் பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட செவிலியர் சங்கம் சார்பில் செவிலியர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. செவிலியர் விடுதி வளாகத்தில் உள்ள நைட்டிங்கேல் அம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நைட்டிங்கேல் அம்மையார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பதவி உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதேபோல், புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.