கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர் அவசர கால நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசினால் 10 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 18 ஆயிரத்து 586 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தவரை 2300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிற்கு உதவும் வகையில் உலக வங்கி ஒரு பில்லியன் டாலர் அவசர நிதியாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது
அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்களை செலுத்த தயாராக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இது கொரோனா வைரஸினால் ஏற்படும் விளைவுகளை சரி செய்ய உதவும் என்றும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இது கொரோனா வைரஸ் உபகரணங்கள், ஆய்வகங்கள், மருத்துவ கருவிகள் வாங்குவது உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர், டேவிட் மால்பாஸ் கூறும்போது "கொரோனாவுக்கு எதிராக போராடும் வளர்ந்துவரும் நாடுகளின் திறனை வளப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக அந்நாடுகள் விரைவில் மீண்டு வரவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்." என தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட நிதியில் பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர், இலங்கைக்கு 129 மில்லியன் டாலர்; ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர் மற்றும் எத்தியோப்பியாவுக்கு 82.6 மில்லியன் டாலர் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அர்ஜென்டினா, கம்போடியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஹைட்டி, கென்யா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறிய தொகை கிடைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.