சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரி குடியரசுத் தலைவருக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
1947ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு கிடைத்தது வெறும் பிச்சை என்றும் 2014ஆம் ஆண்டுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அண்மையில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கங்கனா ரனாவத்தின் கருத்து சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் எனவே அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஸ்வாதி மாலிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்திய கங்கணா ரணாவத் மீது தேசத்துரோக வழக்கு பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்வாதி மாலிவால் கேட்டுக்கொண்டுள்ளார்