மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... கடந்து வந்த பாதை

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்றே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தருணத்தில், இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே அறிவோம்.

பல ஆண்டு காலமாக பல்வேறு கட்சிகளின் கோரிக்கையாக இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, நடப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்றே மசோதா தாக்கல் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தருணத்தில், இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே அறிவோம்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்வதுதான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மூலம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்காக அவை ஒதுக்கீடு செய்யப்படும். கிராம பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்ட திருத்தத்தின் வாயிலாக தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற யோசனை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது.

Lok sabha
Lok sabhapt desk

அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்களவையில் 81வது சட்டதிருத்தமாக இந்த மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு மகளிர் மசோதா மீது தங்களது அறிக்கையை சமர்ப்பித்திருந்த போதும் மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

பிறகு 1998 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பன்னிரண்டாவது மக்களவையில் இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரை மகளிர் மசோதாவை அறிமுகம் செய்த போது ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகளிர் மசோதாவின் கோப்புகளை அவையிலேயே கிழித்தெறிந்தார். இட ஒதுக்கீடுக்குள் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும். அதற்கு பிறகு மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லாததன் காரணமாக மீண்டும் காலாவதியானது.

பிறகு 1999, 2002, 2003 ஆகிய காலகட்டங்களில் வெவ்வேறு அரசுகளால் இந்த மசோதா மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

பல அரசுகளுக்கு போதுமான ஆதரவு இருந்தபோதும் மசோதாவை நிறைவேற்றாமல் கைவிட்டுச் சென்றன.

sonia gandhi
sonia gandhipt desk

இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு 108 வது சட்டத் திருத்தமாக பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அது மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால் மக்களவையில் நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு (தற்போது) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டால், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக அது இருக்கும் என்பது உறுதி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com