மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் செனாலி சென். பிசியோதெரபிஸ்ட்டான இவர், பெங்களூருவில் உள்ள பிலேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாய் பிவா பால் மற்றும் கணவர், மாமியார், மகன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தாய்க்கு 20 தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், அந்த உடலை சூட்கேஸில் அடைத்து வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள மைக்கோ லே அவுட் காவல் நிலையத்திற்கு வாடகை காரில் சென்ற செனாலி சென், அங்கு சூட்கேஸ் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாயின் உடலையும் அவருடைய புகைப்படத்தையும் காட்டி, தன் தாயைக் கொன்று சூட்கேஸில் கொண்டு வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் செனாலி சென் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
செனாலி சென் கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருவதாகவும், முன்பு பிசியோதெரபிஸ்ட்டாகப் பணிபுரிந்த அவர், கடந்த இரண்டு வருடங்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், தனது தாய் பிவா பாலுக்கு 20 தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அதன் பின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து செனாலி சென் கொன்றது தெரிய வந்தது. தனது மாமியாருக்கும், தாய்க்கும் அடிக்கடி தகராறு நடந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலால் செனாலி சென், இந்த கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. நேற்றும் அதேபோல மாமியாருக்கும், தாய்க்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிவா பால் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள் செனாலி சென், வலுக்கட்டாயமாக தூக்க மாத்திரைகளை தனது தாய்க்குக் கொடுத்து அதன் பின் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.