தாஜ்மகாலுக்கு மூன்று பெண்கள் சென்று பூஜை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவில் யமுனை ஆற்றுக்கரையில் உள்ளது தாஜ்மகால். உலக அதிசயங்களில் ஒன்றான இதைக் காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றன. இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதைக் கண்டு களித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் சில இந்து அமைப்புகள், இது, 'தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்த இடம் என்றும் இந்த கோவிலைத் தான், ஷாஜ கான், கல்லறையாக மாற்றி தாஜ்மகால் கட்டினார் என்றும் கூறி வருகின்றனர்.
அங்கு சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனால் தாஜ்மகாலுக்குள் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண் டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலுக்கு வெள்ளிக் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப் பட்டுள்ளது. அன்று, ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் கட்டணமின்றி தாஜ்மகால் வளாகத்தில் தொழுகை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், தாஜ்மகாலுக்குள் நேற்று சென்று பூஜை செய்தனர். அந்த வளாகத்துக்குள் கங்கை நீரை தெளித்து பூஜை செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அந்த அமைப்பில் மாவட்டத் தலைவர் மீனா தேவி திவாகர் கூறும்போது, ‘முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுகை நடத்த அனுமதிக் கப்படும் போது, நாங்கள் ஏன் எங்களின் தேஜோ மஹாலய கோயிலில் பூஜை நடத்தக் கூடாது?’ என்றார்.
இதுபற்றி தொல்லியல் துறை அதிகாரி வசந்த் ஸ்வாரங்கர் கூறும்போது, ‘இதைக் கேள்விபட்டதும் உடனடியாக எங்கள் ஊழியர்களை அனுப்பி சோதனை செய்தோம். அங்கு பூஜை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கேட்டுள்ளனர். அதில் பூஜை நடத்தியது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதுபற்றி ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் தலைவர் கோவிந்த் பராஷர் கூறும்போது, ‘தாஜ்மகாலில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதபோது, இந்து அமைப்பினர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்றார்.
தொழுகை நடத்தும் இடத்தில் பூஜை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.