சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு காவல்துறையினரே முழுக்காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற 11 பெண்கள் கடந்த 23ஆம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இதன் பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்த 11 பேரில் இருவர்தான் தற்போது சாமி தரிசனம் செய்துள்ள பிந்து மற்றும் கனகதுர்கா. பிந்து என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆவார். அத்துடன் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறார். கனகதுர்கா ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் சாமி தரிசனம் செய்ய காவல்துறையினரே திட்டம் வகுத்து அதனை செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மண்டலப் பூஜை நிறைவுப் பெற்று டிசம்பர் 27 ஆம் தேதி கோயிலின் நடை அடைக்கப்பட்டது. பின்பு, 3 நாட்களுக்கு பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையே நடை மூடியிருந்த 3 நாட்களில் காவல்துறையினர் இரண்டு பெண்களையும் பம்பாவில், தங்கள் பாதுகாப்பிற்கு கீழ் தங்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டும், கறுப்பு நிற குர்தா, சல்வார் அணிந்து கொண்டும் அங்கு காவல்துறையினரின் ஆலோசனைப்படி தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரம் பலத்த காவல் பாதுகாப்புடன் திட்டமிட்ட பாதையில் பயணித்துள்ளனர். 18ஆம் படி வழியாக செல்லாத அப்பெண்கள், காவல்துறையினர் ஆலோசனைப்படி பின்வாசலில் சென்றுள்ளனர்.
அவர்கள் செல்லும் வழியில் காவலர்கள் முன்கூட்டியே தயாராக பாதுகாப்புடன் நிற்பதை வெளியான வீடியோவில் காணமுடிகிறது. அத்துடன் அவர்களை அழைத்துச் செல்லும் வழியில் பக்தர்கள் யாரும் எதார்த்தமாக குறுக்கிடாத வகையில் காவலர்கள் நின்றுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் இது அனைத்தும் காவல்துறையினர் திட்டப்படி அரங்கேறியுள்ளது. இவ்வாறு சன்னிதானம் வரை சென்று சாமி தரிசனம் செய்த இரண்டு பெண்களும், அங்கு இரண்டு நிமிடங்கள் கூட நிற்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை பெண்கள் சாமி தரிசனம் செய்த தருணத்தில் கோயிலில் இருந்த சில ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.