மகளிர்தினத்தில் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அறிவிப்பு
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் ஆந்திர அரசு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை ஆந்திர அரசு அறிவித்தது. மேலும் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8 ஆம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு “ஆப்”பான திஷா செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது. மார்ச் 8ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வளாகங்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும் மார்ச் 8 ஆம் தேதி அனைத்து பெண்கள் காவல்துறையினருக்கும் விடுமுறை வழங்குவதோடு, அந்த நாளைக் குறிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளையும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
திஷா பயன்பாட்டில் பெண்கள் மற்றும் குடிமக்களுக்கு அவசரகால சூழ்நிலைகளில் உதவும் SOS சேவை உள்ளது. பயன்பாட்டில் கண்காணிப்பு அம்சம் தவிர, அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பயனுள்ள தொடர்புகள் போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும் ஜூனியர் கல்லூரிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் திஷா செயலியின் முயற்சிகள் பற்றி பரவலாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
மேலும் மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் நடத்தவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்தது.