மோசடி வழக்கில் கைதான மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, பெண் ஒருவர் அவர் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.50 கோடி பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜியை உடல் பரிசோதனைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். பரிசோதனை முடிந்து கிளம்புவதற்காக பார்த்தா சாட்டர்ஜி காரில் காத்திருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், தான் அணிந்திருந்த இரண்டு செருப்புகளையும் அவர் மீது வீசினார். ஆனால், செருப்பு கார் மீது விழுந்தது.
செருப்பு வீசியதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறுகையில், ''உங்களுக்குத் தெரியாதா? அவர் (பார்த்தா சாட்டர்ஜி) பல ஏழைகளின் பணத்தை மோசடி செய்துள்ளார். நான் இங்கு மருந்து வாங்க வந்தேன். எங்களால் டாக்டரை கூட சரியாக பார்க்க முடியாது. ஆனால், அவர் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளார். கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியுள்ளார். மருத்துவமனைக்கு பெரிய கார்களில் வருகின்றார். ஏசியில் சொகுசாக இருக்கிறார். இதனால், தான் செருப்பு வீசினேன். செருப்பு, அவரது தலையில் விழுந்திருந்தால் அமைதி கிடைத்திருக்கும்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: ஓடாத வாகனங்களுக்கு எப்போ டீசல் போட்டீங்க? மோசடியில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்