ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன். 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்சனா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, நிசாமுதீனுக்கும் அவரது மனைவி அப்சனாவுக்கும் கருத்துவேறுபாடு நிலவிய நிலையில், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் கடந்த டிச. 28-ஆம் தேதியும் கணவன் - மனைவி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது 2 வயது மகனுடன் வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற அப்சனா கதவை மூடியுள்ளார். பின்னர், அப்சனா செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். அப்சனா செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் 2 வயது மகன் தொடர்ந்து அழுதுள்ளார். இதனால், அப்சனாவுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், அந்தக் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்தக் குழந்தை, மூச்சுத் திணறி இறந்துள்ளது.
அப்போது, அறைக்குள் வந்த அப்சனாவின் கணவன் நிசாமுதீன் தன் மகன் அசைவின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தன்மீது வெறுப்பில் இருந்த மனைவி, மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதாக அப்சனா மீது நிசாமுதீன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்சனாவை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ’தனது மகனை தாம் கொல்லவில்லை என்றும், தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாலேயே இறந்திருக்கலாம் எனவும் அப்சனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.