மகாராஷ்டிரா மாநிலம் ஷுலிபஞ்சன் மலைப் பகுதியில் தத்தாத்ரேயர் என்ற கோயில் உள்ளது. மழைக்காலத்தில் இப்பகுதி ரம்மியமான அழகைக் கொண்டிருக்கும். இதையடுத்து, இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த நிலையில், 23 வயது நிறைந்த ஸ்வேதா தீபக் சர்வாஸ் என்ற பெண்ணும், 25 வயது நிறைந்த அவரது நண்பர் சூரஜ் சஞ்சாவ் முலேவும் இந்த மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஸ்வேதா தீபக், கார் ஓட்டி பழக நினைத்துள்ளார். இதையடுத்து நண்பர் சூரஜ் சஞ்சாவின் காரை ரிவர்ஸ் எடுத்திருக்கிறார்.
ஆனால் எதிர்பாராவிதமாக, நொடிப்பொழுதில் கார் கிடுகிடுவென பின்னோக்கிச் சென்று மலையில் இருந்து கீழே விழுகிறது. கார் 300 அடி உயர குன்றின் கீழே உருண்டு பள்ளத்தில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஸ்வேதா மரணமடைந்தார். கார் பின்னோக்கிச் செல்ல தொடங்கியவுடன் ஸ்வேதாவின் நண்பர் ‘Clutch, Clutch’ எனக் கத்துகிறார்.
இருந்தபோதும் பதற்றத்தில் ஸ்வேதா தடுமாறி விபத்துக்குள்ளாகிறார்.
இந்த வீடியோவை அவரது நண்பரே எடுத்துள்ளார். இது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தரைத்தளத்தில் ஓட்டுவதற்கு நன்கு பயிற்சி பெற்றவர்களே மலைப்பகுதியில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்வார்கள். அதனால், வளைவுகள், மேடு பள்ளங்கள் அதிகம் உள்ள ஆபத்தான மலைப் பாதைகளில் அதிக பயிற்சி இல்லாதவர்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் இந்த வீடியோவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக மலை உச்சயில் ஓட்டுவதற்கு பழக நினைத்தது மிகப்பெரிய தவறு என்றும் விளையாட்டிற்கு கூட நண்பர்கள் அந்தப் பெண்ணை அனுமதித்து இருக்கக் கூடாது என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.