பிரசவத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தால் வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட தனது குழந்தையுடன் மூன்றாண்டு போராட்டத்துக்கு பிறகு அதன் தாய் இணைந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஸ்மா கானம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அதே தினத்தில் நஸ்மா காதுன் என்ற பெண்மணியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, அவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே நேரத்தில் அவர்களுக்கு பேறுகாலம் பார்க்கப்பட்டது. இதில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்த நிலையில், ஒரு குழந்தை திடீரென இறந்துவிட்டது. உண்மையிலேயே, இறந்துபோன குழந்தை நஸ்மா காதுனுக்கு பிறந்தது தான். ஆனால் பெயர் குழப்பம் காரணமாக இறந்த குழந்தை நஸ்மா கானத்துக்கு பிறந்தது என செவிலியர்கள் தவறுதலாக புரிந்து கொண்டனர். இதையடுத்து, உயிருடன் இருந்த குழந்தையை நஸ்மா காதுனிடம் செவிலியர்கள் வழங்கினர். நஸ்மா கானத்திடம் அவரது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் சோகம் தாங்காமல் நஸ்மா கானமும், அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரும் கதறி அழுதனர். பின்னர் வீட்டுக்கு சென்ற பிறகு நஸ்மா கானத்துக்கு சந்தேகம் வந்துள்ளது. கடைசி நிமிடம் வரை வயிற்றில் குழந்தையின் இயக்கம் நன்றாக இருந்த போது, எப்படி குழந்தை இறந்திருக்கும் என அவர் யோசித்துள்ளார். அதன் பிறகு, தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நஸ்மா கானம், தனக்கு குழந்தை பிறந்த நாளன்று வேறு யாருக்கெல்லாம் குழந்தை பிறந்துள்ளது என்ற பட்டியலை அவர் பார்த்துள்ளார். அப்போது நஸ்மா என்ற பெயரிலான வேறொரு பெண்ணுக்கும் அன்றைய தினம் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீண்ட வழக்காடலுக்கு பிறகு 2021-ம் ஆண்டு குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றமும் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த ஆண்டுதொடக்கத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும், நஸ்மா கானத்துக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு அண்மையில் வெளியானது. அதில், அந்தக் குழந்தை நஸ்மா கானத்துக்கு பிறந்ததுதான் என்றும், பெயர் குழப்பத்தால் குழந்தை மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பிறகு நஸ்மா கானிடம் அவரது குழந்தை கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது.