மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்ற அச்சத்தால் பிரசவம் ஆன பெண்ணை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அக்கம்பக்கத்தினர் தடுத்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனா அச்சத்தால் மருத்துவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது, மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்கு சென்று திரும்பியவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் ரானிபந்த் கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக ஊரடங்குக்கு முன்பு வேலைத் தேடி தன் கணவருடன் பாபனிபூர் கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார்கள் அந்த தம்பதியினர். இதனையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து உறவினர் வீட்டுக்கு திரும்பிய பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மருத்துவமனையிலிருந்து திரும்பியதால் அந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என அச்சமடைந்த கிராம மக்கள். அப்பெண்ணின் உறவினர் வீட்டு முன்பு கூடி, பிரவசமான பெண்ணை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் பிறந்த குழந்தையுடன் அந்தப் பெண் செய்வதறியாமல் வீதியிலேயே நின்றார். இதனையறிந்த அப்பகுதி மருத்துவ அதிகாரி ஒருவர் அப்பெண்ணையும் குழந்தையையும் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.