ரயிலில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளிக்கு ரயிலிலேயே குழந்தை பிறந்தது
நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும்பட்சத்தில் சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி தொழிலாளிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக உபியின் மதுராவில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவக் குழுவிடம் சிகிச்சைப் பெற கர்ப்பிணி மறுத்துள்ளார். இந்தத் தகவல் ரயில் முழுவதும் பரவியதும், அதே ரயிலில் இருந்த பெண் மருத்துவர் உதவிக்கு முன்வந்துள்ளார். கர்ப்பிணிக்கு உடனடியாக அவர் பிரசவம் பார்த்துள்ளார்.
டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே கர்ப்பிணி தொழிலாளிக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.