ஹரியானா மாநிலம் ரேவாலி மாவட்டத்தில் உள்ள பலியார் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவர் கிராம சபையின் முன்னாள் தலைவராக (sarpanch) இருந்தவர். இவர் தனது பிட் புல் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அவர் செல்லமாக வளர்த்து வந்த பிட் புல் நாய் அவரது மனைவியின் மீது பாய்ந்து மூர்க்கத்தனமாக கடிக்க துவங்கியுள்ளது.அவரது மனைவி மட்டுமல்லாது அவரது இரு குழந்தைகளையும் அந்த நாய் கடிக்கத் துவங்கியதால் சூரஜ் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தனது குடும்பத்தினரை காப்பாற்ற தடியை எடுத்து நாயை சூரஜ் பலமுறை அடித்தபோதும், அது மனைவி மற்றும் குழந்தைகளை கடிப்பதை நிறுத்தவில்லை. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர் நாயுடன் போராடு குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரஜின் மனைவிக்கு தலை, கை, கால்களில் மொத்தமாக 50 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரது இரு குழந்தைகளும் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முன்னதாக கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிட் புல் வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 11 வயது சிறுவனின் முகத்தில் 200 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.