ஃபேஸ்புக்கில் அறிமுகமான நபர்மீது காதல்கொண்டு அவரை திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார்.
மார்ச் 16ஆம் தேதி டெல்லியின் இஃப்க்கோ சோவ்க் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் குருகிராமிலுள்ள தனது 24 வயது காதலனை சந்திக்கச் சென்றிருக்கிறார். தன்னை பதிவு திருமணம் செய்துகொள்வதாக காதலன் அழைத்திருந்த நிலையில் மதியமே வந்த காதலி கிட்டத்தட்ட 5 மணிநேரம் காத்திருந்திருக்கிறார். ஆனால் அங்குவந்த காதலனும், அவருடைய நண்பனும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை தடுக்க முயன்றபோது தான் தாக்கப்பட்டதாகவும் போலீசில் அப்பெண் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில், தாங்கள் இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் அறிமுகமானதாகவும், சிறிது நாட்களிலேயே இருவரும் நெருக்கமாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது காதலனை காண அடிக்கடி குருகிராமிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய காதலனை நம்பி 16ஆம் தேதி குருகிராமிற்கு சென்றபோது 5 மணிநேரம் கழித்து தனது நண்பனுடன் வந்த காதலன், பதிவு திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டி இருப்பதால் தன்னை செக்டார் 53-இல் உள்ள விடுதி அறையில் இருக்குமாறு கூறி, உடன் வந்த நண்பனுடன் தன்னை அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் மட்டும் ஒரு அறையில் காத்திருந்தபோது தனது காதலனும் அவருடைய நண்பரும் சிறிது நேரம் கழித்து அங்கு வந்ததாகவும், இருவரும் மாறி மாறி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், தடுக்க முயன்றபோது இருவரும் தன்னை அடித்து தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெண்ணின் புகாரையடுத்து இந்திய சட்டப்பிரிவுகள் 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செக்டார் 53 காவல் நிலைய ஆய்வாளர் அமித் குமார் இதுகுறித்து கூறுகையில், ”அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் வாக்குமூலமும் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதுகுறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது” என்று கூறியுள்ளார்.