இறந்துவிட்டதாக விசாரணையை முடித்த போலீசார் - உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்

இறந்துவிட்டதாக விசாரணையை முடித்த போலீசார் - உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்
இறந்துவிட்டதாக விசாரணையை முடித்த போலீசார் - உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்
Published on

பீகாரில் ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக உறவினர்களை கைதுசெய்த 3 மாதங்களுக்குப் பிறகு இறந்ததாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி குமாரி. இவருக்கு 2008-ஆம் ஆண்டு மன்போத் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவருடன் திருமணம் நடந்திருக்கிறது. இந்த பெண் 2019ஆம் ஆண்டு மே மாதம் தனது 7 வயது இளைய மகன் பவனுடன் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பேல்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். மே 17-ஆம் தேதி தாப்ரா நதிக்கரையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது.

பாஸ்ரா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வசித்துவரும் ஸ்வீட்டியின் தகப்பனார், அந்த உடல் தனது மகளுடையதுதான் என்று உறுதி செய்ததுடன், மகளின் கணவர் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாகவும் கூறி 5 பேர்மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின்பேரில் மூன்று மாதங்கள் விசாரணை நடந்திருக்கிறது. அதன்படி, ஒரு பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்ததுடன், ஸ்வீட்டியின் மரணத்திற்கு தாங்கள்தான் காரணம் என அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்று அவர்களை சிறையில் அடைத்துவிட்டனர்.

ஆனால் தற்போது அந்த பெண் உயிருடன் இருப்பதை கண்டறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். தங்கள் தவறான விசாரணையைக் குறித்து சங்கடத்திற்கு ஆளான போலீஸார், அந்த பெண்ணை முசாஃபர்பூரிலிருந்து சரண் மாவட்டத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

முதல் விசாரணையில் அந்த பெண் ஒரு நபருடன் தனது குழந்தையைக் கூட்டிக்கொண்டு மும்பைக்குச் சென்று இருந்ததாகவும், சமீபத்தில்தான் முசாஃபர்பூருக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தியபிறகு, ஸ்வீட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதும் தொடர்ந்திருந்த வழக்கு தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com