Lift-ல் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய `முதலாளி’, தன் செயலுக்கு ட்வீட் வழியாக புது விளக்கம்!

Lift-ல் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய `முதலாளி’, தன் செயலுக்கு ட்வீட் வழியாக புது விளக்கம்!
Lift-ல் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய `முதலாளி’, தன் செயலுக்கு ட்வீட் வழியாக புது விளக்கம்!
Published on

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண்ணை மிக மோசமாக வீட்டு உரிமையாளர் துன்புறுத்திய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

டெல்லியின் நொய்டாவின் சயிஃப் அலி கௌல் என்ற பெண், தன் வீட்டில் 20 வயதாகும் அனிதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் தன் வீட்டின் பணிப்பெண்ணாக சில மாதங்களுக்கு முன் சேர்த்திருக்கிறார். அனிதாவுக்கு சயிஃப் அலி, பல துன்புறுத்தல்களை கொடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவர் மீது பல சமயங்களில் வன்முறையை மேற்கொண்டார் என்றும், குறிப்பாக வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் துன்புறுத்தல்களை கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த துன்புறுத்தல்கள், கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

வெளியில் சொல்லக்கூடாதென அப்பெண் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், தற்போது விஷயம் சிசிடிவி வழியாக வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. சமீபத்தில் லிஃப்ட்டில் வைத்து அந்தப் பெண்ணை சயிஃப் அடிப்பது, லிஃப்ட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகின. அது வெளியானதை தொடர்ந்து, டெல்லி கௌதம் புத் நகர் காவல்துறையினர் இதுபற்றி தாமாக முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

கூடுதல் காவல் துணை ஆணையர் இதுபற்றி தெரிவித்துள்ள தகவல்களின்படி, “பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் உதவியுடன், இதுபற்றி முதற்கட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது” என்றுள்ளார். இதுபற்றிய வீடியோவொன்றை காவல் துணை ஆணையர் தனி வீடியோவொன்று பதிவிட்டுள்ளார்.

காவல்துறையின் இந்த ட்விட்டர் பதிவின் கீழ், தன் தரப்பு செய்தியை சயிஃப் அலி கமெண்ட் செய்துள்ளார். அதில் அவர், “அப்பெண் என் சாப்பாட்டில் தூக்க மாத்திரைகள் கலந்து, என் வீட்டிலிருந்த பொருட்களை திருடினாள். அதற்கான அனைத்து சிசிடிவி காட்சிகளும் மற்றும் சாட்சிகளும் என்னிடம் உள்ளன” என்றுகூறி அப்பெண்ணின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, “அப்பெண் திருடியே இருந்தாலும், நீங்கள் யார் அவருக்கு தண்டனை கொடுக்க? முதலில் சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியது? நீங்கள் வேண்டுமானால் அவரை பணியிலிருந்து நீக்கியிருக்கலாம் அல்லது காவல்நிலையத்தில் புகார்கூட அளித்திருக்கலாம். ஆனால் அதைவிட்டுவிட்டு ஏன் அடித்து துன்புறுத்தினீர்கள்?” என்று கேட்டுள்ளார் ஒரு ட்விட்டர்வாசி.

அதற்கு சயிஃப், “நீங்கள் சொல்வதுபோல நான் அவளை துன்புறுத்தியது உண்மையெனில், அவள் எப்படி கடந்த 2 வருடங்களாக என் வீட்டில் பணிபுரிய முடியும்? ஆம், அப்பெண் என்னிடம் 2020 நவம்பர் முதல் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடைசி 6 மாதங்களாக 24 மணி நேர பணியில் இருக்கிறார். அதற்கு முன்பு வரை 12 மணி நேர பணியில் இருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் அந்த வீடியோ அதிகாலை 4:00 மணியளவில் நடந்தது. வீட்டில் அப்போது எந்த ஆண்களும் இல்லை. அதனாலேயே நான் அப்படி அழைத்துச் சென்றேன். இதுபோல அப்பெண் வேலை செய்யும் மற்றொரு வீட்டிலும் திருடியது குறிப்பிடத்தக்கது. 6 மணியளவில் அப்பெண் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இதற்கடுத்து என்ன நடந்தது என உங்களுக்கு தெரியாது. இந்த வீடியோவை வைத்து, அப்பெண்ணின் அம்மா என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார்” என ட்வீட் செய்துள்ளார்.

சயிஃப்ஃபின் இந்த கமெண்டுக்கும், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர், “தயவுசெய்து எந்தப் பதிவும் போடாதீர்கள். காவல்துறையினர் இதில் முடிவு சொல்லட்டும்” என்றுள்ளார். ஆம், அதுவே இரு தரப்பில் யார் பக்கம் தவறு, யாரெல்லாம் தண்டனைக்கு உரியோர் என்பதை சொல்லும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com