பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாத்திமா என்பவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது.
பின்னர் இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அதன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியாவதற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆட்களுக்கு கிடைத்ததாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் டெல்லி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு முறையாக தீர்ப்பாய இணையத்தில் வெளியிடப்படுவதற்கு முன்பே ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்பான நபர்களுக்கு கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.