அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கலந்து கொண்ட பேரணியின்போது பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்
எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் சிஏஏ-வுக்கு எதிராக ‘அரசியலமைப்பை காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இதில், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித்
தலைவர் அசாதுதீன் ஒவைஸி கலந்து கொண்டார். அந்த பேரணியில் ஒவைஸி மேடையேறியபோது, பெண் ஒருவர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என
மைக்கை பிடித்து கோஷமிட்டார். உடனடியாக அதனை தடுக்க முற்பட்ட ஒவைஸி, அந்தப் பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தார்.
எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் மேடையேறி அந்தப் பெண்ணை
வலுக்கட்டாயமாக கீழிறக்கி கைது செய்தனர்.
இதன்பின்னர் பேசிய ஒவைஸி, அந்த பெண்ணுக்கும், தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், “அமைப்பாளர்கள் அந்த
பெண்ணை இங்கு அழைத்திருக்கக்கூடாது. இது எனக்குத் தெரிந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்கானவர்கள். எதிரி
நாடான பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம். எங்களின் முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதேயாகும்” எனத் தெரிவித்தார்.