இன்றைய இளம்வயதினர் பலரும் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுவதையே விரும்புகின்றனர். குறிப்பாக சில இளைஞர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்களை தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள் பேச ஆரம்பித்துவிட்டால் அவர்களிடம் ஆசைவார்த்தைகளை பேசி போட்டோக்களை அனுப்பச்சொல்லி கேட்கின்றனர்.
பின்னர் அந்த போட்டோக்களை மார்பிங் செய்து அதனை வைத்து, மிரட்டுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகார்களும் தற்போது அதிகரித்தவண்ணமே உள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் ஒரு பெண் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள காவாலி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் கல்யாண் என்ற இளைஞர் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ஆபாச மெசேஜ் அனுப்பிய அந்த இளைஞரிடம் எப்படியோ பேசி முகவரியை வாங்கியிருக்கிறார் அந்த பெண். அந்த இளைஞரும் முகவரியை கொடுத்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர் தனது பகுதியிலுள்ள பேக்கரியில் உள்ள டீக்கடையில் வேலைசெய்து வந்தது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அங்குசென்ற அந்த பெண், ஏன் எதற்கு என்று எதையும் தெரிவிக்காமல் அந்த நபரை நடுரோட்டில் வைத்து செருப்பால் அறைந்து சரமாரியாக அடித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை தடுக்க முயன்றபோதுதான், தனக்கு அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், அதனால் அட்ரஸ் கேட்டு அவரை தேடிவந்து செருப்பால் அடித்ததாக கூறியிருக்கிறார். இளைஞரை நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.