’காதல் கண்ணை மறைக்கும்’ என்று சொல்வார்கள். அதற்கேற்றார்போல் சில நேரங்களில் தங்கள் காதலை நிரூபிக்க சிலர் செய்யும் முட்டாள்த்தனமான சம்பவங்களை நாம் கேட்பதுண்டு. அதுபோன்றதொரு சம்பவத்தில் ஈடுபட்டு தனது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்.
தனது எதிர்காலத்தையே பணயம் வைத்து, 24 வயது பெண் ஒருவர் தனது காதலனுக்காக பி.காம் 3ஆம் ஆண்டு தேர்வு எழுதச் சென்று கையும் களவுமாக மாட்டியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த பெண்ணின் காதலன் உத்தராகண்டிற்கு சுற்றுலாச் சென்றிருப்பதுதான்.
குஜராத்திலுள்ள வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த பி.காம் 3ஆம் ஆண்டு தேர்வின்போது FACT குழு பரிசோதனை மேற்கொண்டபோது, இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இதன் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த பெண்ணும், அவருடைய காதலனும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள் என்பதும், தன் காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதியது அந்த பெண்ணின் பெற்றோரு தெரியாது என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும், ஆசிரியர்கள் கண்டுபிடிக்காதிருக்க கம்ப்யூட்டர் உதவியுடன் ஹால் டிக்கெட்டில் சில மாற்றங்களை செய்து பிரிண்ட் எடுத்து, தேர்வறைக்குள் நுழைந்ததையும் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். ”தேர்வு மேற்பார்வையாளர் தினந்தோறும் மாறுவதால் அனைத்து மாணவர்களையும் அடையாளம் கண்டுகொள்வது சிரமம்.
எப்படியிருந்தாலும் தினமும் ஹால் டிக்கெட்டை பரிசோதிப்பர். ஆனால், தினந்தோறும், அந்த இருக்கையில் வேறு ஒரு மாணவன் அமர்ந்து இருப்பார் என்பதை மற்றொரு மாணவி கூறியதையடுத்து அவர் பிடிபட்டார்” என்று கூறியுள்ளார் கல்லூரி ஃபேலக்டி உறுப்பினர்.
அந்த பெண் பிடிபட்ட பிறகு, மாணவன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் உத்தராகண்டிற்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் மூன்றாமாண்டு பி.காமில் தொடர்ந்து தோல்வியுற்று வந்ததால் அவருக்கு பதிலாக அவருடைய காதலி தேர்வு எழுத வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், VNSGU இன் சிண்டிகேட் அந்த பெண்ணின் பி.காம் பட்டப்படிப்பை ரத்து செய்ய பல்கலைக்கழகத்தின் FACT குழுவின் பரிந்துரையை ஏற்க முடிவு செய்தால், அந்தப் பெண் தனது அரசாங்க வேலையை கூட இழக்க நேரிடும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது.