கர்நாடக மாநிலம் துமகூர் மாவட்டம் அருகே உள்ள புஜரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நரசம்மா. இவரது மகள் லட்சுமி (10). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நரசம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். லட்சுமி தன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நரசம்மா உயிரிழப்பதற்கு முன்பு, மகள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் 4 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இதுபற்றி நரசம்மாவின் அக்கா நஞ்சம்மா (45) என்பவருக்குத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து லட்சுமியின் வங்கிக்கணக்கில் இருக்கும், 4 லட்சத்தை எடுக்க நினைத்த நஞ்சம்மா, கடந்த 8ம் தேதி சிவராத்திரி அன்று லட்சுமியை தன் சொந்த ஊரான, ஷிரா நிடகட்டேவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். "உனக்குத் தாய் இல்லை என்ற கவலை வேண்டாம். நான் உன்னைத் தாய் போன்று பார்த்துக் கொள்கிறேன்" எனப் பாச மழை பொழிந்துள்ளார். பின் “உன் வங்கிக்கணக்கில் உள்ள 4 லட்ச ரூபாயை எடுத்து, என்னிடம் கொடு” என கேட்டு உள்ளார். இதற்கு லட்சுமி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சம்மா, அயர்ன் பாக்ஸை வைத்து லட்சுமியின் காலில் சூடு வைத்தார். அப்போது லட்சுமி கத்தாமல் இருக்க, அவரது வாயை நஞ்சம்மாவின் மகன் பசவராஜ் மூடியுள்ளார். சூடு வைத்ததில் லட்சுமியின் தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அச்சத்தில் அவர் இதுபற்றி வெளியே சொல்லவே இல்லை எனத் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ஒருவரிடம் கூறி லட்சுமி அழுதுள்ளார். அவரது தொடையைப் பார்த்து ஆசிரியை அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நஞ்சம்மாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, லட்சுமி அச்சத்தில் தன் தொடையில் வெந்நீர் கொட்டியதாகப் பொய் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், நஞ்சம்மா மற்றும் அவருடைய மகன் பசவராஜ் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் காயமடைந்த லட்சுமியை மீட்ட போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் சிகைச்சைக்காக சேர்த்துள்ளனர். பணத்திற்காகச் சொந்த தங்கையின் மகளுக்குப் பெரியம்மா அயர்ன் பாக்சால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.